பெருவெடிப்பின் பெரும் இரகசியமும், கடவுள்துகளும்
“ஹிக்ஸ் போஸானை நாம் கண்டுபிடித்து விட்டோம்” என்று சுவிஸ் நாட்டில் உள்ள ‘சேர்ன்’ (CERN) அமைப்பின் விஞ்ஞானிகளால், 2012ம் ஆண்டு யூலை மாதம் 4ம் திகதி, உத்தி யோகபூர்வமாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. பிரபல இயற்பியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங் கூட, நடக்கும் என சிறிது சந்தேகப்பட்ட சம்பவமாக அந்த அறிக்கை இருந்தது. நம்பவே முடியாததற்குச் சாட்சியாகவும், தீர்க்க முடியாத சிக்கல்களுக்குத் தீர்வாகவும், அறிவியல் உலகின் மைல் கல்லாகவும் அந்த அறிக்கை வெளியாகியிருந்தது. உலகில் உள்ள அனேகர் இதைக் கேள்விப்பட்டதும் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்தார்கள். ஆனால், நம்மில் பலர் இதைப் பார்த்த விதம் வேறு விதமாயிருந்தது. யாருக்கு இந்தச் சம்பவத்தில் எந்தச் சம்பந்தமுமில்லையோ, அவரை முன்னிலைப்படுத்தி செய்திகளும், தகவல்களும் நம்மிடையே பரவின. அவர் வேறு யாருமல்ல, ‘கடவுள்’.
ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில் கடவுள் அனாவசியமாக நுழைக்கப்பட்டார் என்றே சொல்ல வேண்டும். ஹிக்ஸ் போஸானுக்கு, ‘கடவுள் துகள்கள்’ என்று பெயரிட்டு யாரோ ஒருவர் அழைத்ததால், ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிக்கப்பட்டதும், கடவுளே கண்டுபிடிக்கப்பட்டதாகப் பலர் பேச ஆரம்பித்தார்கள். இப்படிப்பட்ட தவறான பரப்புரைகள், நல்லதொரு அறிவியல் சம்பவத்தைப் பற்றிய சரியான அறிவை நாம் பெற்றுக் கொள்ளத் தடையாகவும் இருந்தன. மீடியாக்கள் முதல் சமூக வலைத்தளங்கள் வரை பலவிதமான விளக்கங்களும், கருத்துகளும் ஹிக்ஸ் போஸான் பற்றிச் சொல்லப்பட்டன. சரியான கருத்துகளுடன் பலவும், கருத்துகளற்றுச் சிலவும் அவற்றில் இருந்தன. ஆனாலும் சந்தேகங்கள் பல விளக்கப்படாமலே விடப்பட்டிருந்தன. அதனால் அடிப்படையில் இருந்து இந்த விசயத்தை அலசிப் பார்த்தால் என்ன என்று தோன்றியது. முடிந்தவரை ஹிக்ஸ் போஸானுடன் சம்பந்தப்பட்ட அனைத்து விளக்கத்துடன் இந்தக் கட்டுரையை உங்களுக்குத் தருவதற்கு முயற்சிக்கிறேன். சரி, நாம் ஹிக்ஸ் போஸான் பற்றிய அடிப்படை விசயங்களுக்குப் போகலாம் வாருங்கள்.
இன்றைக்கு சற்றேறக்குறைய 13.7 பில்லியன் வருடங்களுக்கு முன்னர்..! மிகமிகமிகச் சிறிய புள்ளியாகச் சுருங்கியிருந்த ‘ஏதோ ஒன்று’ தவிர்க்க முடியாத ஒரு கணத்தில், மிகப்பிரமாண்டமாய் வெடித்துச் சிதறியது. வெடித்துச் சிதறியது என்றால், உங்களால் கற்பனையே பண்ண முடியாத மாபெரும் வெடிப்பு அது. அந்தப் பெருவெடிப்பை ‘பிக் பாங்’ (Big Bang) என்கிறோம். அந்தப் பெருவெடிப்பில் உருவான சக்தியின் பேராற்றல், வெளிச்சப் பிழம்பாய் அனைத்துத் திசைகளிலும் சிதறியது. ஒரு அணுகுண்டு வெடித்தால், அதன் சக்திகள் எப்படி விரி வடையுமோ, அதுபோல பிரபஞ்சமும் விரிவடையத் தொடங்கியது. 13.7 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் விரிவடையத் தொடங்கிய பிரபஞ்சம் இன்றும், இதை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் இந்தக் கணத்திலும் விரிவடைந்து கொண்டே செல்கிறது. பல பில்லியன் வருடங்களாக இன்னமும் தொடர்ந்து அது விரிவடைகிறது என்றால், அந்த ஆரம்பப் பெருவெடிப்பு எவ்வளவு வீரியமானது என்பதை நீங்களே கற்பனை பண்ணிப் பாருங்கள்.

'பிரபஞ்சம் இப்போதும் விரிவடைகிறது என்று எப்படித் தெரியும்?’ என்ற கேள்வி தற்சமயம் உங்களுக்கு எழலாம். பூமியில் இருந்து நவீன தொலைநோக்கிக் கருவிகள் மூலம், பிரபஞ்ச எல்லை நோக்கிப் பார்க்கும்போது, அங்கே உள்ள காலக்ஸிகள் (Galaxy) நம்மைவிட்டு விலகிச் செல்வதை அவதானிக்க முடிகிறது. பலூன் ஒன்றில், பேனாவின் மூலம் சுற்றிவரப் புள்ளிகளை இட்டு, பின்னர் அந்தப் பலூனைப் படிப் படியாகப் பெரிதாக ஊதும்போது, அதில் உள்ள புள்ளிகள் எப்படி ஒன்றை ஒன்று விட்டு விலகிச் செல்லுமோ, அப்படிப் பிரபஞ்ச எல்லைகளில் இருக்கும் காலக்ஸிகளும் விலகிச் செல்கின்றன. மிகத் தொலைவில் இருக்கும் காலக்ஸிகள் விலகிச் செல்வதை ‘ரெட் ஷிஃப்ட்’ (க்ஷீமீபீ sலீவீயீt) என்னும் ‘செந்நிற ஒளி விலகல்’ முறையால் கணித்திருக்கிறார்கள். ‘ரெட் ஷிஃப்ட்’ என்றால் என்னவென்று நான் இப்போது விளக்கப் போனால் இந்தக் கட்டுரை மிகவும் நீண்டுவிடும். அதனால் உங்கள் வீட்டில் பத்தாம் வகுப்புப் படிக்கும் தம்பியோ, தங்கையோ இருந்தால், அவர்களிடம் ரெட் ஷிஃப்ட் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
13.7 பில்லியன் வருடங்களாக அந்த ஆரம்பப் பெருவெடிப்பின் சக்தி, பிரபஞ்சத்தை இன்னும் விரிவடைய வைத்துக்கொண்டு இருக்கிறது என்று சொல்லும்போது, 13.7 பில்லியன் வருடங்கள் என்பதை, ஒரு மனிதனாக உங்களால் கற்பனை பண்ணிப் பார்க்கவே முடியாது. இலக்கங்களாக எழுதினாலும் அதன் தாக்கம் புரியாது. அதனால் அதை ஒரு உதாரணத்தின் மூலம் சுலபமாகப் புரிய வைத்தார்கள் விஞ்ஞானிகள். இப்போது நானும் உங்களுக்குப் அதைப் புரியவைக்க முயற்சிக்கிறேன். புரிகிறதா பாருங்கள்.
13.7 பில்லியன் வருடங்களை, ‘ஒரு வருடம்’ என்று கற்பனையாக எடுத்துக் கொள்ளுங்கள். இந்தக் கட்டுரையை நீங்கள் ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி 2012ம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தால், சரியாக ஒரு வருடத்துக்கு முன்னர், 2011ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி, ‘பிக் பாங்’ என்னும் அந்தப் பெரு வெடிப்பு நடந்திருக்கும். நமது சூரியன் 2012ம் வருடம் ஜனவரி மாதம் 1ம் திகதியில்தான் உருவாகியிருக்கும். பூமியில் உயிரினம் தோன்றியது இன்று காலைதான். அதாவது 2012ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி காலை 7 மணிக்கு. இன்று காலை 11 மணிக்கு மனிதன் தோன்றினான். இரண்டு செக்கன்களுக்கு சற்று முன்னர் மோசேயுடன் கடவுள் பேசினார். ஒரு செக்கனுக்கு முன்னர் இயேசு பிறந்தார். இப்போது நான் சொன்னது உங்களுக்குப் புரிந்தால், இதையும் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! ஒரு வருடத்துக்கு முன்னர் பெரு வெடிப்பில் பிரபஞ்சம் தோன்றியதென்று வைத்துக் கொண்டால், கடவுள் மனிதனுடன் தொடர்பு கொண்டது இரண்டு செக்கன்களுக்கு முன்னர்தான். அதாவது 13.7 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோன்றிய பிரபஞ்சத்தில் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்தான் கடவுள் மனிதனுடன் பேசியிருக்கிறார். எவ்வளவு பெரிய இடைவெளி என்று யோசித்துப் பாருங்கள். அதுமட்டுமில்லாமல், பிரபஞ்சம் ஒரு புள்ளியாகச் சுருங்கி இருந்தபோதும், அதற்கு முன்னரும் கடவுள் எங்கிருந்தார்? என்ன செய்து கொண்டிருந்தார் என்ற கேள்விகள் அடிக்கடி கேட்கப்படுகின்றன.
“இது என்ன முட்டாள்தனமான கேள்விகள். கடவுள் எங்கிருந்தார்? என்ன செய்து கொண்டிருந்தார் என்று கேட்பது எவ்வளவு பைத்தியகாரத்தனம். கடவுள் எங்கும் இருப்பவரல்லவா?” இப்படித்தான் நாம் சிந்திப்போம். ஆனால் பிரபஞ்சம் புள்ளியாக ஒடுங்கிய நிலையில் அந்த ‘எங்கும்’ என்ற சொல்லுக்கே அர்த்தம் இல்லை என்கிறது அறிவியல். இடம், காலம், தூரம், வேகம், வெளிச்சம் என எதுவுமே இல்லாத சூனியம் அது. அங்கு ‘எங்கும்’ என்பதுமில்லை, ‘எதுவும்’ என்பதுமில்லை. இதைச் சரியாக நாம் புரிந்தால்தான், மிகமுக்கியமான ஒரு உண்மையை முன் வைத்துத்தான் மேலே உள்ள கேள்விகள் கேட்கப்பட்டன என்று நமக்குப் புரியவரும். அந்த உண்மை என்ன என்பதையும் முடிந்தவரை விளக்குகிறேன்.....!
பிரபஞ்சம் (Universe) என்பது நம்மால் கற்பனையே பண்ண முடியாத அளவு பெரியது. குறுக்கு வெட்டாக 93 பில்லியன் ‘ஒளியாண்டுகள்’ அகலம் இருக்குமென கணிக்கப்பட்டிருக்கிறது (ஒளி ஒரு செக்கனுக்கு 3 இலட்சம் கிலோமீட்டர் செல்லும். இப்படி ஒரு வருசத்துக்கு ஒளி செல்லும் தூரம், ஒரு ஒளியாண்டு எனப்படும்). பூமியிலும், பூமிக்கு வெளியிலும் இரண்டு இடங்களுக்கு இடையில் இருக்கும் தூரத்தை நம்மால் கணித்துச் சொல்ல முடிகிறது. நாம் நடப்பதாக இருந்தாலும், பிரயாணம் செய்வதாக இருந்தாலும் இந்த இடைத் தூரத்தினூடாகத்தான் இயங்க முடியும். உங்கள் காலைத் தூக்கி ஒரு அடி எடுத்து வைக்கும் அளவு இடமாவது இருந்தால்தான், உங்களால் அந்த ஒரு அடி தூரத்தைக் கூடக் கடக்க முடியும்.
இந்த இடைவெளி, பூமியில் இருந்தால் அதைத் ‘தூரம்’ என்கிறோம். அதுவே பூமிக்கு வெளியே இருந்தால் ‘வெளி’ (Space) என்கிறோம். இப்போது கற்பனையாக, நாம் நிற்கும் பூமி படிப்படியாகச் சுருங்கி ஒரு புள்ளியாகி விடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தப் புள்ளியிலேயே நிற்கும் நீங்கள் எங்கு எப்படி நகர முடியும்? நீங்கள் நகர்வதற்கு இடம் என்பதே இல்லாமல் போய்விடுமல்லவா? அதைத் தொடர்ந்து, பூமி மட்டுமல்ல, கோடானு கோடி நட்சத்திரங்களைக் கொண்ட பிரபஞ்சமே படிப்படியாகச் சுருங்குகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். பிரபஞ்சமே மொத்தமாகச் சுருங்கி ஒரு புள்ளியாகிறது. ஆனால் நீங்கள் மட்டும் முழுமையாக இருக்கிறீர்கள். அப்படியாயின் நீங்கள் நடப்பதற்கோ, நகர்வதற்கோ இடமே அங்கு இல்லாமல் போய் விடுமல்லவா? அங்கு இருப்பது நீங்களும் ஒன்றுமே இல்லாத வெறும் சூனியமும்தான்.
உங்களால் எங்கும் நடக்க முடியாது, நடப்பதற்கு இடம் இல்லை. பார்க்க முடியாது, பார்ப்பதற்குப் பொருளுமில்லை, ஒளியுமில்லை. பேச முடியாது, பேச்சைக் கடத்தும் சாதனம் எதுவும் இல்லை. எதையும் சிந்திக்கவும் முடியாது, சிந்திப்பதற்கு எதுவும் கிடையாது. காரணம், சிந்தனை என்பதே நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள், சம்பவங்கள் சார்ந்ததுதானே! அவை எதுவுமே இல்லையென்றால், சிந்தனைக்கும் இடமில்லை. கீழ், மேல், இடம், வலம் என்ற திசைகள் கூட இல்லை. அப்படிப்பட்ட நிலையில் நீங்கள் அங்கு என்ன செய்வீர்கள்? அப்படியே உங்களைக் கோடி ஆண்டுகள் விட்டால் என்ன செய்வீர்கள்? இது போலப் பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்னர், அது ஒரு புள்ளியாக ஒடுங்கி இருந்ததல்லவா? கடவுள் எப்போதும் உள்ளவரல்லவா? எனவே பிரபஞ்ச வெடிப்பின்போதும், அதற்கு முன்னரும் கடவுள் எங்கிருந்தார்? என்ன செய்தார் என்ற கேள்விகள் எழுவதில் நியாயம் உண்டு அல்லவா? அறிவியலுடன் இறையியல் மோதும் முக்கிய இடமாக இது இருக்கிறது. இங்கு கடவுளுக்கான ஒரு விளக்கத்தைக் கொடுக்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகிறது.
இந்த சமயத்தில், அதாவது 1964 இல் இங்கிலாந்தைச் சேர்ந்த ‘பீட்டர் ஹிக்ஸ்’ (Peter Higgs) என்னும் இயற்பியல் ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்த ஆய்வு ஒன்று வெளியிடப்பட்டது. ‘ஹிக்ஸ் மெக்கானிசம்’ (Higgs Mechanism) என்னும் பெயரில் அந்த ஆய்வு வெளியிடப்பட்டது. அணுவில் உள்ள துகள்கள் பற்றிய ஆராய்ச்சியின் மிகமுக்கிய கண்டுபிடிப்பாக அது இருந்தது. அந்தக் கண்டுபிடிப்பின்படி, பெருவெடிப்பில் பிரபஞ்சம் உருவாகிய அதே நேரத்தில் உருவான ஒரு பிரதானமான துகள் இருப்பதாகச் சொல்லப்பட்டது. அத்துடன் அந்தத் துகள் பிரபஞ்சம் எங்கும் பரவியிருப்பதாகவும் சொல்லப்பட்டது. அந்தத் துகளின் பெயர்தான் ‘ஹிக்ஸ் துகள்’ (Higgs Particle) ஆகும். பெருவெடிப்பினால், பிரபஞ்சம் எங்கும் ஹிக்ஸ் துகள்கள் பரவி, ‘ஹிக்ஸ் ஃபீல்ட்’ (Higgs Field) என்னும் ஒரு பெருவெளி உருவாகியிருக்கிறது என்று பீட்டர் ஹிக்ஸின் ஆராய்ச்சி முடிவு சொன்னது. இவை எல்லாமே சாத்தியமான ஒன்றுதான் என்ற வகையில் சொல்லப்பட்டதேயல்லாமல், யாராலும் அதை இருக்கிறது என்று உறுதியாகக் காட்ட முடியவில்லை. பீட்டர் ஹிக்ஸ், அவரது அறிக்கையை வெளியிட்டதன் பின்னர், ஹிக்ஸ் துகள் இருக்கின்றன என்று கற்பனையாக வைத்துக் கொண்டு, அதுவரை தீர்க்க முடியாத பௌதிகவியல், கணிதச் சமன்பாடுகளை எல்லாம் சரி பார்த்தபோது, எல்லாமே சுலபமாகத் தீர்க்கப்படக் கூடியவையாக மாறின.
உதாரணமாக, ஹிக்ஸ் துகள்களின் எடைக்கு, கணிதச் சமன்பாடுகளில் பயன்படுத்துவது போல, ஆங்கில எழுத்தான X என்பதைக் கொடுத்து சமன்பாடுகளைச் சமப்படுத்திப் பார்த்தபோது, அனைத்தும் சுலபமாகத் தீர்வுக்கு வந்தன. ஆனால் இவையெல்லாம் ஹிக்ஸ் துகள்கள் இருக்கலாம் என்னும் பீட்டர் ஹிக்ஸின் தத்துவப்படி நடந்ததேயல்லாமல், அது இருக்கிறது என்று நிரூபிக்க முடியவில்லை. இருந்த சூழ்நிலைகளைப் பொறுத்தவரை அப்படி ஒரு துகள் இருக்கிறது என்றே அனைத்து விஞ்ஞானிகளும் நம்பிக்கையான ஒரு முடிவுக்கு வந்தனர். ஆனால் நிரூபிக்காத எதுவும் அறிவியலில் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. அன்றிலிருந்து ஹிக்ஸ் துகளைத் தேடுவதே விஞ்ஞானிகளின் பெரும் நோக்கமாகவும் ஆயிற்று. ஹிக்ஸ் துகளைக் கண்டுபிடித்துவிட்டால், பிரபஞ்ச வெடிப்பின் ஆரம்ப இரகசியம் முழுமையாகத் தெரிந்துவிடும் என்றும் விஞ்ஞானிகள் நம்பினர்.
லியோன் லேடெர்மான் (Leon Lederman) என்பவர், பிரபஞ்சத்தின் தோற்றத்துக்கும் அதைத் தொடர்ந்து உருவான ‘ஹிக்ஸ் ஃபீல்டுக்கும்’ காரணமாக இருந்த ஹிக்ஸ் துகள்கள் பற்றிய விபரங்களை உள்ளடக்கி, ஒரு அறிவியல் புத்தகத்தை எழுதினார். அந்தப் புத்தகத்தின் பெயர் “The God Particle-If the Universe Is the Answer, What Is the Question?” என்பதாகும். இந்தப் புத்தகத்தில்தான் முதன்முதலாக ஹிக்ஸ் துகள்களுக்கு ‘கடவுள் துகள்கள்’ என்ற பெயர் கொடுக்கப்பட்டிருந்தது. இந்தப் புத்தகம் வெளிவந்தது முதல் ஹிக்ஸ் துகள்களைக் ‘கடவுள் துகள்கள்’ (God Particles) என்று அனைவரும் அழைக்கத் தொடங்கினார்கள். கடவுளின் பெயர் இங்கு வந்து நுழைந்ததன் காரணம் இதுதான். இது தவிர்த்து கடவுளுக்கும் அந்தத் துகளுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.
இனி ஹிக்ஸ் துகள்கள் பற்றியும், ஹிக்ஸ் துகள் கண்டுபிடிக்கப்பட்டது பற்றியும் விரிவாகப் பார்க்கலாம். இவற்றை நாம் விரிவாகப் பார்ப்பதற்கு இயற்பியலில் இரண்டு முக்கிய விசயங்கள் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். அவை இரண்டுமே பிரபஞ்சம் முழுவதும் பரவியிருக்கும் அனைத்துக்கும் அடிப்படையானவை. அதில் ஒன்று ‘துகள்கள்’ (Particles), மற்றது ‘விசைகள்’ (Forces). இவை இரண்டும்தான் இந்தப் பிரபஞ்சத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன. இவை இரண்டையும் பற்றி விரிவாகத் தெரிந்து கொண்டால் மட்டுமே நமக்கு ஹிக்ஸ் துகள்கள் பற்றிப் புரிவதற்கான அடிப்படை அறிவு கிடைக்கும். அதனால் இனி வருபவையெல்லாம் இயற்பியலில் சிக்கல் வாய்ந்தவையாக இருக்கும். படிக்கும்போது மனதைத் தளர விடாமல் தொடர்ந்து படியுங்கள்.
உலகில் உள்ள அனைத்துப் பொருட்களையும் எடுத்துக் கொண்டீர்களானால், அவை மூலக்கூறுகளால் (Molecule) ஆனவையாக இருக்கும். இந்த மூலக்கூறுகள், அணுக்களால் (Atom) உருவாக்கப்பட்டிருக்கும். அணுக்கள், இலத்திரன் (Electron) மற்றும் அணுக்கருவால் (Nucleus) உருவானவை. அணுக்கரு, புரோட்டான் (Proton), நியூட்ரான் (Neutron) ஆகியவற்றால் உருவானது. புரோட்டானும், நியூட்ரானும் குவார்க் (Quark) என்பவற்றால் ஆனவை. இதுவரை இன்றுள்ள நவீன இயற்பியல் கண்டுபிடித்திருக்கிறது. அதாவது, நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பொருளைப் பிரித்தால் வரும் மிகச் சிறிய பகுதியை அணு (Atom) என்று சொன்னார்கள். அந்த அணுவைப் பிரிக்கவே முடியாது என்றும் நினைத்தார்கள் (அணுவைத் துளைத்து அதனுள் ஏழுகடலை அவ்வையார் நுழைத்தது தமிழர்களுக்கேயான தனிக்கதை). ஆனால் அந்த அணுவையும் பிளந்து அதனுள் அணுக்கருவும் இலத்திரனும் உண்டு எனக் கண்டுபிடித்து, பின்னர் அந்த அணுக்கருவைப் பிளந்து அதனுள் புரோட்டானும், நியூட்ரானும் இருக்கின்றன என்று கண்டுபிடித்து, அதன் பின்னர் அந்தப் புரோட்டானையும், நியூட்ரானையும் கூடப் பிளந்து, அவை இரண்டுமே குவார்க் என்பதால் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள். நாளைய நம் சந்ததியினர் இந்தக் குவார்க்கையும் பிளந்து அதனுள் என்ன இருக்கிறது என்று கண்டுபிடிக்கலாம். மேலே படத்தில், ஒரு ஈயிலிருந்து குவார்க் வரை எப்படி பிரிக்கப்பட்டிருக்கின்றன என்று குறிப்பிட்டுக் காட்டப்பட்டிருக்கிறது.
இயற்பியலில் குவார்க் போன்றவற்றை துகள்கள் (Particles) என்று அழைக்கிறார்கள். தற்சமயம் அறியப்பட்டவரையில் பிரிக்க முடியாத மிகச் சிறிய பகுதியாகத் துகள்களைக் கருதுகிறார்கள். துகள்களில், குவார்க்குகளுடன் இலத்திரனும் அடங்கும். காரணம், புரோட்டானையும், நியூட்ரானையும் பிரிக்க முடிந்த நம்மால் இலத்திரனைப் பிரிக்க முடியவில்லை. எனவே இலத்திரனும் ஒரு பிரிக்க முடியாத துகளாகவே கருதப்படுகிறது. இங்கு புரோட்டானையும், நியூட்ரானையும் எடுத்துக் கொண்டால், அதில் புரோட்டான் ‘+’ மின்னேற்றத்தையும் (Positive Electric charge), நியூட்ரான் எந்தவித ஏற்றமும் இல்லாமலும் இருக்கின்றன. ஆனால் இவை இரண்டுமே குவார்க்குகளினால் ஆனவை. எனவே இவை இரண்டுக்கும் என்ன வித்தியாசம் இருக்கலாம் என்று பார்ப்பதற்காக குவார்க்குகளை ஆராய்ந்தால், குவார்க்குகளில் மொத்தமாக 6 வகை குவார்க்குகள் இருப்பது தெரிய வந்தது. அவற்றில் இரண்டு வகை குவார்க்குகள் மட்டும் புரோட்டானிலும், நியூட்ரானிலும் இருப்பது தெரிந்தது. இந்த இருவகை குவார்க்குகளும் அமைந்திருக்கும் முறைதான் புரோட்டானுக்கும், நியூட்ரானுக்கும் வித்தியாசத்தைக் கொடுக்கின்றன.
குவார்க்குகளில் மொத்தமாக 6 வகை குவார்க்குகள் உண்டு என்று கண்டுபிடித்துள்ளனர் எனச் சொல்லியிருந்தேன். அந்த ஆறு குவார்க்குகளின் பெயர்களையும் தமிழில் தருவதில் சிரமம் இருப்பதால், அவற்றை ஆங்கிலத்திலேயே தருகிறேன். 1. Up Quark 2. Down Quark, 3. Charm Quark, 4. Strange Quark, 5. Top Quark, 6. Bottom Quark என்பவைதான் அந்த ஆறு வகை குவார்க்குகளும் ஆகும். இதில் Up குவார்க்குகளும், Down குவார்க்குகளும் புரோட்டானிலும், நியூட்ரானிலும் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் மூன்றாக, புரோட்டானில் இரண்டு Up குவார்க்குகளும், ஒரு Down குவார்க்கும், நியூட்ரானில் இரண்டு Down குவார்க்குகளும், ஒரு Up குவார்க்கும் உண்டு. இதுவே இவையிரண்டுக்கும் வித்தியாசத்தைக் கொடுக்கின்றன. இதைத் தொடர்ந்து ஆராய்ந்தபோது, புரோட்டானுக்குள்ளும், நியூட் ரானுக்குள்ளும் இருக்கும் மூன்று குவார்க்குகளும் ஒன்றுடன் ஒன்று பிரிக்க முடியாதபடி இணைக்கப்பட்டிருப்பதை விஞ்ஞானிகள் அவதானித்தார்கள். இந்த இணைப்பு, அணுக்கருவுக்குள் இருக்கும் புரோட்டானும், நியூட்ரானும் ஒன்றுடன் ஒன்று பிரிக்க முடியாமல் இணைக்கப்பட்டிருப்பதைப் போல இருந்தது. இதை மேலும் ஆராய்ந்தபோது, விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியமான ஒரு விடை கிடைத்தது. குவார்க்குகளை எந்தவிதமான சக்தி ஒட்ட வைத்திருக்கிறதோ, அதேவிதமான சக்திதான் புரோட்டானையும் நியூட்ரானையும் ஒட்ட வைத்திருக்கிறது என்று தெரிய வந்தது. அத்துடன், அப்படி ஒட்டவைத்திருப்பது சக்தி மட்டுமல்ல, அதுவும் ஒரு துகள்தான் என்றும் தெரிந்தது. அதன் மூலம் இயற்பியலில் முக்கிய ஒரு துகளாக அது பதிவு செய்யப்பட்டது. அந்தத் துகளின் பெயர் ‘குளூவான்’ (Gluon). அதாவது இரண்டு குவார்க்குகளை இணைப்பது ஒரு விசை (சக்தி) என்று நினைத்தபோது, அந்த விசையைக் கடத்தும் துகளாக இந்தக் குளுவான் தொழில்படுவது தெரிந்தது.
இந்தச் சமயத்தில்தான் ஐன்ஸ்டைனும் (Einstein), இந்திய விஞ்ஞானியான சத்தியேந்திரநாத் போஸும் (Satyendranath Bose) சேர்ந்து, Bose-Einstein Statustucs என்னும் இயற்பியல் விதி ஒன்றைக் கண்டுபிடித்தார்கள். அந்த விதியின்படி உலகில் உள்ள அனைத்து ஈர்ப்பு விசைகளும் துகள்களாலேயே கடத்தப்படுகின்றன என்னும் முடிவுக்கு அவர்கள் வந்தார்கள். உதாரணமாக புவியீர்ப்பு (Gravity) என்பது ஒரு ஈர்ப்பு விசை. இந்த விசை மூலம் நாம் பூமியால் ஈர்க்கப்படுகிறோம். அதுமட்டுமில்லாமல் சூரியனின் ஈர்ப்பு விசையால் பூமி ஈர்க்கப்படுகிறது. சந்திரன், பூமியால் ஈர்க்கப்படுகிறது. அப்படிப் பார்த்தால் சந்திரனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள தூரங்கள் முழுவதும் அந்த ஈர்ப்பு விசை பரவியிருக்க வேண்டும். காற்று உள்ள வெளியானாலும், காற்றில்லா வெளியானாலும் அந்த விசை தொடர்ந்து இருக்க வேண்டும். அதை ஆராய்ந்து பார்த்தபோது, கிராவிட்டான் (Graviton) என்னும் துகள் சந்திரனுக்கும், பூமிக்கும் இடையில் உள்ள வெளியில் முழுமையாகப் பரவி, இரண்டினதும் ஈர்ப்புவிசைகளையும் கடத்தி, இணைத்து வைத்திருக்கிறது என்ற முடிவு கிடைத்தது. அதே கிராவிட்டான்கள்தான் நம்மையும் பூமியில் ஒட்ட வைத்துக் கொண்டிருக்கின்றன. துரதிர்ஷ்ட-வசமாக கிராவிட்டான் பற்றிய முழுமையான தகவல்கள் இன்னும் நமக்குக் கிடைக்கவில்லை. இது போலவே ‘ஃபோட்- டான்’ (Photon), Z, -W, +W என்னும் துகள்களும், விசைகளைக் கடத்துகின்றன என்று கண்டுபிடித்தார்கள். அன்றிலிருந்து விசைகளைக் கடத்தும் துகள்களை, விஞ்ஞானி போஸ் அவர்களின் பெயரில் ‘போஸான்கள்’ (Bosons) என்று அழைத்தார்கள்.
துகள்கள் என்றால் அவற்றிற்கு எனச் சில தனித் தன்மைகள் இருக்க வேண்டும். ஒவ்வொரு துகள்களுக்கும் நிறை, மின்னேற்றம், சுழற்சி என்பன அவற்றின் தன்மைக்கு ஏற்ப இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. துகள்களில் சில எடையுடனும் இருந்தன. எடையில்லாமலும் இருந்தன. துகள்களின் எடை ‘மெகா எலெக்ட்ரான் வோல்ட்’ (விமீரீணீமீறீமீநீtக்ஷீஷீஸீ க்ஷிஷீறீt- விமீக்ஷிMegaelectron Volt-MeV) என்னும் அளவீட்டால் அளக்கப்பட்டது. இந்தத் தன்மைகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு மேலும் பல துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இலத்திரனின் சாயல்கள் கொண்ட சில துகள்களும் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றுக்கு லெப்டான்கள் (Leptons) எனப்பெயரிட்டுப் பிரித்தார்கள். அதில் ஆறு விதமான லெப்டான்கள் பிரதானமாகக் கண்டுபிடிக்கப்பட்டன. அவை 1. Electron, 2. Muon, 3. Tau, 4. Electron Nuetrino, 5. Muon Nuetrino, 6. Tau Nuetrino என்பனவாகும். இயற்பியலை இலகுவானதாகக் கொண்டுவர, மொத்தமாகக் கண்டுபிடிக்கப்பட்ட துகள்களான ஆறு குவார்க்குகளையும், ஆறு லெப்டான்களையும், நான்கு போஸான்களையும் சேர்த்து ஒரு அட்டவணை உருவாக்கப்பட்டது. அந்த அட்டவணை ‘ஸ்டாண்டார்ட் மாடல்’ (Standard Model) என்று அழைக்கப்பட்டது.
இந்த அட்டவணையைத் தயாரித்தவுடன் பிரச்சினை முடிந்துவிடவில்லை. கண்டுபிடிக்கப்பட்ட துகள்கள் ஒருபுறம் இருக்க, கண்டுபிடிக்கப்படாமல் பல துகள்கள் இருக்கின்றன என்ற சந்தேகம் விஞ்ஞானிகளுக்குத் தோன்றியது. அந்தச் சந்தேகத்துக்கு அடிப்படைக் காரணமாக ஒரு விசயம் இருந்தது. ஒவ்வொரு சமயங்களிலும் அணுக்கருவின் எடையை மொத்தமாக அளக்கும்போது வரும் எடையையும், அதில் உள்ள துகள்களின் எடைகளைத் தனித்-தனியே கூட்டும்போது வரும் எடையையும் சரிபார்க்கையில், கிடைத்த எடை வித்தியாசம் மிகவும் அதிகமாக இருந்தது. வித்தியாசப்பட்ட எடை மெகா எலெக்ட்ரான் வோல்ட்டுகள் (MeV) இல்லாமல், ஜிகா எலெக்ட்ரான் வோல்ட்டுகள் (GeV) எனப் பெரியளவில் வித்தியாசப்பட்டன. குறிப்பாக 100 நிமீக்ஷி க்கும் அதிகமான எடை வித்தியாசப்பட்டது. இதனால், அளக்கப்பட முடியாத ஏதோ துகள்கள் அங்கே இருக்கின்றன, ஆனால் அவற்றை அறிய முடியவில்லை என்று சந்தேகம் உருவாகியது. ஏன் அப்படி இருக்கிறது என விஞ்ஞானிகள் தவித்தபோது, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ‘பீட்டர் ஹிக்ஸ்’ என்பவர் ‘ஹிக்ஸ் மெக்கானிசம்’ என்னும் ஆய்வை வெளியிட்டார். அந்த ஆய்வில் அவர், ஈர்ப்பு விசைகளைக் கடத்திக் கொண்டு செல்லும் போஸான்கள் இருப்பது போல, எடையையும் கடத்திக் கொண்டு செல்லும் துகள்களும் உண்டு என்றார். அதை ஏற்றுக் கொண்ட விஞ்ஞானிகள், அந்தத் துகள்களுக்கு ‘ஹிக்ஸ் துகள்கள்’ என்று பெயரிட்டனர். போஸான்கள் விசையைக் கடத்துவது போல, ஹிக்ஸ் துகள்கள் எடையைக் கடத்துகின்றன. எனவே ஹிக்ஸ் துகள்களும் ஒரு வகை போஸான்கள்தான் என்ற முடிவுக்கு வந்தனர். அதனால் அது ‘ஹிக்ஸ் போஸான்’ (Higgs Boson) என்றும் அழைக்கப்பட்டது. ஹிக்ஸ் போஸான் எடையைக் கடத்துகிறது என்று சொன்னால் போதுமா? அது எப்படிக் கடத்துகிறது என்றும் சொல்ல வேண்டுமல்லவா? அதனால், ஹிக்ஸ் இதை எப்படி விளக்கினார் என்பதை இப்போது நாம் பார்க்கலாம். அதற்கு ‘விசைகள்’ பற்றி சிறிது நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும். விசைகளும் மேலே சொல்லப்பட்ட துகள்களைக் கொண்டே உருவாகின்றன.
பூமியிலும், பிரபஞ்சத்திலும் அடிப்படை விசைகளாக (Force) மொத்தமாக நான்கே நான்கு விசைகளே இருக்கின்றன. 1. மின்காந்த விசை (Electromagnetic Force-EM), 2. திடமான அணுவிசை (Strong Nuclear Force-S). 3. திடமற்ற அணுவிசை (Weak Nuclear Force-W), 4. புவியீர்ப்பு விசை (Gravitational Force-G) என்பவைதான் அந்த நான்கும். இந்த நான்கு விசைகளுமே பூமியில் உள்ள அனைத்து விசைகளுக்கும் ஆதாரமானவை. இதில் மின்காந்த விசை ஃபோட்டோன் துகள்களாலும், திடமான அணுவிசை குளுவான்களினாலும் திடமற்ற அணுவிசை போஸான்களினாலும், புவியீர்ப்பு விசை கிராவிட்டான்களினாலும் கடத்தப்படுகின்றன. இந்த நான்கு விசைகளும் இப்போது பிரிந்திருந்தாலும், பெருவெடிப்பிற்கு முன்னர் பிரபஞ்சம் ஆரம்பப் புள்ளியாக, ஒரே புள்ளியாக இருந்தபோது, இந்த நான்கு விசைகளும் ஒன்றாகச் சேர்ந்தே இருந்திருக்கின்றன. இதை எந்த விஞ்ஞானிகளும் மறுக்கவில்லை. இந்த நான்கு விசைகளும் ஒன்றாக இருந்தபோது, இவை இயற்பியல் விதிகளின்படி ஒரே சமன்பாட்டின்கீழ் (Equation) அடங்கியிருக்க வேண்டும். அதாவது இவையெல்லாவற்றையும் சேர்த்து ஒரே இயற்பியல் சமன்பாடு இருந்திருக்க வேண்டும். நான்கு விசைகளும் ஒரே சமன்பாட்டில் வருவதை Theory of Everything என்கிறார்கள். பிரபஞ்ச வெடிப்புக்கு முன்னால் ஒன்றாக இருந்த சமன்பாட்டை மீண்டும் இப்போது கொண்டு வருவதற்கு விஞ்ஞானிகள் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்குத் தடையாக இருந்தவைதான் ஹிக்ஸ் போஸான் போன்ற கண்டுபிடிக்கப்படாத துகள்கள். ஹிக்ஸ் போஸான் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டால், அந்த ஆரம்ப வெடிப்பின்போது இருந்த அனைத்தையும் கண்டுபிடித்துவிடலாம் என்று விஞ்ஞானிகள் உறுதியாக நம்புகின்றனர்.
இந்த நான்கு விசைகளும் ஒன்றாக இருந்ததை வைத்துக் கொண்டு ஹிக்ஸ் இப்படிச் சொன்னார். “பிரபஞ்ச வெடிப்பின்போது நான்கு விசைகளும் ஒன்றாக இருந்தன. அப்போது குவார்க்குகளும், பல சக்தித் துகள்களும் இந்த நான்கு விசைகளுடன் இணைந்து ஒரே புள்ளியாய் இருந்தன. ஒரு குறித்த கணத்தில் ஈர்ப்புவிசையும், திடமான அணுவிசையும் அவற்றிலிருந்து விலகின. அதனால் உருவான உந்துதலால் அங்கே ஒரு பிரமாண்டமான வெடிப்பு ஏற்பட்டது. அப்போது ஈர்ப்புவிசையிலிருந்தும், திடமான அணுவிசையிலிருந்தும் 6 வகை குவார்க்குகள் உருவாகின. பின்னர் மின்காந்தவிசையும், திடமற்ற அணுவிசையும் பிரிந்தன. அவற்றிலிருந்து ஆறுவகை லெப்டான்கள் உருவாகின. தொடர்ச்சியாக நடந்த தாக்கங்களினால் ஹிக்ஸ் போஸான்கள் உருவாகி, அவை பரவி, ‘ஹிக்ஸ் ஃபீல்டை’ உருவாக்கின. இந்த ஹிக்ஸ் போஸான்கள் அதிக எடையுள்ளவை. பிரபஞ்ச வெடிப்பினாலும், அதன் பின்னர் நடைபெற்ற தாக்கங்களினாலும் உருவான ஏனைய துகள்கள் அனைத்தும் ஹிக்ஸ் ஃபீல்டினூடாகச் செல்லும்போது, அந்தத் துகள்களில் ஹிக்ஸ் போஸான்களும் ஒட்டிக்கொள்ள, அந்தத் துகள்கள் எடையைப் பெற்றன.
எடை அதிகமாக இருந்தாலும், அளவில் கண்டுபிடிக்கவே முடியாதபடி மிகச் சிறியதாக இருந்தது ஹிக்ஸ் போஸான். உடையை அணிந்துகொண்டு ஆற்றின் குறுக்கே நாம் நடந்து கடந்துவிட்டு, நம் ஆடையைப் பார்த்தால் ஆடை முழுவதும் நனைந்திருக்குமல்லவா? ஆனால் மொத்தமாக நனைந்த உடையைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்தால், அந்த உடையில் தனித்தனியாக நீரின் மூலக்கூறுகளாக H2O ஒட்டியபடி இருக்குமல்லவா. இது போலத்தான் ஹிக்ஸ் போஸானும். ஆற்றில் H2O மூலக்கூறுகள் இருப்பது போல ஹிக்ஸ் ஃபீல்டில், ஹிக்ஸ் போஸானும் இருக்கும். அதனூடே துகள்கள் சென்றால், நீர் ஆடையில் ஒட்டிக் கொள்வது போல ஹிக்ஸ் போஸான்களும் ஒட்டிகொள்ளும். நீரில் நனைந்த பின்னர் ஆடையின் எடை அதிகமாக இருப்பது போல, ஹிக்ஸ் ஃபீல்டினூடாகச் சென்ற துகள்களை அளக்கும்போது எடை அதிகமாக இருக்கும். நீர் கண்ணுக்குத் தெரியும். ஹிக்ஸ் போஸான் கண்ணுக்கும் தெரியாது, அதைக் கண்டுபிடிக்கவும் முடியாது. ஆனாலும் அதைக் கண்டுபிடித்தே தீர்வது என்று விஞ்ஞானிகள் முடிவு செய்தார்கள். அதற்கென ஒரு கருவியை உருவாக்கி, அதன்மூலம் கண்டுபிடிக்க முடிவும் செய்தனர். அப்படி உருவாக்கப்பட்ட கருவியின் பெயர்தான் ‘பெரிய ஹாட்ரோன் மோதி’ (Large Hadron Collider) என்பதாகும்.
ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 20 நாடுகள் இணைந்து, ஜெனீவாவில் அணு ஆராய்ச்சிக்கென அமைத்த ஒரு அமைப்பு தான் ‘சேர்ன்’ (CERN). பிரெஞ்சு மொழியில், Conseil Européen pour la Recherche Nucléaire என்பதுதான் CERN என்பதன் விரிவு. அதாவது ஆங்கிலத்தில் European Organization for Nuclear Research. இந்த அமைப்பினூடாக சுவிஸ்ஸுக்கும், பிரான்ஸுக்கும் உள்ள எல்லையில், 27 கிலோ மீட்டர் அளவுள்ள வட்டப்பாதையில், நூறு மீட்டர் நிலத்துக்குக் கீழே, LHC என்று அழைக்கப்படும் Large Hadron Collider என்னும் மாபெரும் கருவி அமைக்கப்பட்டிருக்கிறது. 9 மீட்டர் நீளமான பிரமாண்டமான குழாய் போன்ற அமைப்புள்ள 1200 காந்தங்கள் இந்த வட்ட வடிவப் பாதையில் நிறுவப்பட்டன. அந்தக் காந்தக் குழாயின் நடுவே அமைந்த 6 சென்டிமீட்டர் அகலமான மிகச் சிறிய குழாயினூடாக இரண்டு புறமும், புரோட்டான்களைச் செறிவாக்கி ஒளியின் வேகத்தில், 99.9999991 வீத பங்கு வேகத்தில், எதிர்த்திசைகளில் மோதும் வகையில் சுற்றவிடப்பட்டன. இப்படி அனுப்பப்படும் புரோட்டான்கள், ஹாட்ரான்கள் (Hadron) எனப்படும். அமைக்கப்பட்ட காந்தக் குழாய்களினால் முடுக்கிவிடப்படும் புரோட்டான்கள் அதியுயர் வேகத்துடன் ஒன்றுடன் ஒன்று மோதும். ஏதோ ஒரு நிலையில் அங்கே மிகச்சிறிய அளவுள்ள ஹிக்ஸ் போஸான்கள் மோதும் சாத்தியங்கள் வரும்போது, அவை பெரிதாக சக்தியை வெளிப்படுத்தி வேறு பல துகள்களாகச் சிதைவடையும். அப்படி மோதும்போது ஏற்படுபவை பலவிதமாகப் பதிவுசெய்யப்பட்டு அவதானிக்கப்படும். ஆனால், பல தடவை இந்தப் பரிசோதனைகள் செய்யப்பட்டபோதும் அதில் எந்த வெற்றியும் கிடைக்கவில்லை. அதே நேரம் தோல்விகளும் அதிக காலம் நீடிக்கவில்லை. 2012ம் ஆண்டு ஜூலை மாதம் 4ம் திகதி நம்பவே முடியாத அந்தச் சம்பவமும் சரித்திரத்தில் நடந்தேறியது.
எந்த நிறையுடன் ஹிக்ஸ் போஸானை விஞ்ஞானிகள் எதிர்பார்த்தார்களோ அதைவிடச் சிறிது அதிகமான எடையான 125.3 ஜிகா எலெக்ட்ரான் வோல்ட் அளவுகளில் துகள்கள் மோதிச் சிதறின. இதன்மூலம் ஹிக்ஸ் போஸானை ஒத்த துகள்கள் உண்டு என்பதை அறிவியல் உலகம் நிரூபித்துக் காட்டியது. ஆனாலும் இது இந்த இடத்தில் ஒரு ஆரம்பம்தான். இதன் தொடர்ச்சியாக மேலும் பல துகள்கள் கண்டுபிடிக்கப்படும் என்ற திடமான நம்பிக்கைக்கு விஞ்ஞானிகள் வந்துவிட்டார்கள்.
பிரபஞ்சத்தின் ஆரம்ப வெடிப்பின்போது உருவாகி, பிரபஞ்சம் முழுவதும் பரவியிருக்கும் சக்திகள் பற்றியே விஞ்ஞானிகளின் கவனம் இப்போது செல்கின்றது. பிரபஞ்சம் முழுவதும் இருக்கும் நட்சத்திரங்கள் அனைத்தைச் சேர்த்தாலும் பிரபஞ்சத்தின் 0.4 சதவீதத்துக்கு குறைவாகவே இருக்கின்றன. அதில் 3.6 விகிதம் நெபுலாக்கள் என்று சொல்லப்படும் வாயுக்களும் இருக்கின்றன. எஞ்சிய 96 வீதத்தில் 23 வீதம் Dark Matter என்னும் கரும்பொருளும், 73 வீதம் Dark Energy என்று சொல்லப்படும் கருப்பு சக்தியினாலும் நிரம்பியிருக்கிறது என்று நம்பப்படுகிறது. ஹிக்ஸ் போஸான் இருக்கிறது என்று நம்பப்பட்டு, அது இருக்கிறது என்று நிரூபித்த காரணத்தினால், இவையும் கட்டாயம் இருக்கும் என்ற முடிவுக்கே விஞ்ஞானிகள் வந்திருக்கின்றனர். ஆனால் இந்தக் கரும்பொருள் பற்றியும், கருப்பு சக்தி பற்றியும் எந்த விளக்கமும் இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை. அவை இருக்கின்றன என்று தெரிகிறது. ஆனால் அவை இருப்பதைக் கண்டுபிடிப்பதுதான் இனி விஞ்ஞானிகளின் அடுத்த பயணமாக இருக்கும்.
- ராஜ்சிவா


good article :)
ReplyDelete